விமர்சிக்கப்படும் ஹதீஸ்கள்
பி. ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டுமே முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம்.
இதில் ஒரு சந்தர்ப்பத்திலும் நாம் வளைந்து கொடுத்ததில்லை. இந்த அடிப்படைக் கொள்கையில் நம்மிடம் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. ஆயினும் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் நம்மிடம் தவறுகள் ஏற்பட்டு அதை அவ்வப்போது பகிரங்கமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.
நம்மை விடப் பல மடங்கு அறிவும், ஆற்றலும் மிக்க எத்தனையோ அறிஞர்கள், ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் தவறாக முடிவு செய்து பின்னர் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த நிலை ஏற்படாத எந்த அறிஞரும் உலகத்தில் ஒரு காலத்திலும் இருந்ததில்லை.
அறிவிப்பாளர் குறித்த விமர்சனங்கள் அடங்கிய அனைத்து நூல்களும் கிடைக்கப் பெறாமை
பொதுவாக மனிதரிடம் காணப்படும் மறதி, கவனமின்மை
ஒருவரைப் பற்றி செய்த விமர்சனத்தை அதே பெயருடைய மற்றவருக்குப் பொருத்தி விடுதல்
இந்தத் துறையில் விற்பன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் செய்த விமர்சனங்களில் தவறு ஏற்படாது என்று எண்ணி அப்படியே அவர்களின் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளுதல்
இது போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன.
தவ்ஹீத் ஜமாஅத் மூத்த அறிஞர்களைப் பொறுத்த வரை அவர்கள் அனைவருமே மத்ஹபை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கூடங்களில் தான் கற்றனர். அவர்கள் கற்ற கல்விக் கூடங்களில் ஹதீஸ் கலை குறித்து முறையாகக் கற்பிக்கப்படாததால் அந்தக் கலையைக் கூட சுய முயற்சியால் கற்கும் நிலையில் இருந்தனர்.
இதன் காரணமாகத் தான் துவக்க காலங்களில் சில ஹதீஸ்கள் குறித்து நிலை மாற்றம் ஏற்பட்டது.
தற்போது ஹதீஸ் கலை தொடர்பான அனைத்து நூல்களும் திரட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் நாம் பேசிய, எழுதிய, அங்கீகரித்த ஹதீஸ்களில் பலவீனமானவை உள்ளனவா? என்பதை நமது வாழ்நாளிலேயே மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்பட்டது.