1980ஆம் ஆண்டு வரதட்சணை வாங்காமலே திருமணம் செய்தார். வரதட்சணைக் கொடுமை தாண்டவமாடும் ஒரு நாட்டில், வரதட்சணை வாங்காத இவரின் வீரமிக்க இச்செயல், அன்று வினோதமாக நோக்கப்பட்டுக் கொச்சைப்படுத்தப்பட்டது. அதை அவர் கண்டு கொள்ளவில்லை. அதன் விளைவாக இன்று பலவாயிரம் இளைஞர்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யத் துணிவு பெற்றுள்ளனர். அத்தோடு, வரதட்சணைக் கொடுமையை அறியாமல் அப்போது வாங்கிய தொகையை, பகிரங்கமாக திருப்பிக் கொடுக்கின்றனர்.
பீஜே அவர்களும் காலம்சென்ற அவரது அண்ணன் அறிஞர் பீ.எஸ். அலாவுத்தீன் மன்பயீ அவர்களும் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ததற்கு ஒரு வாத்தியாரின் பரிதாபகரமான தற்கொலை முடிவு காரணமாக அமைந்தது. பல பெண் குழந்தைகளையுடைய அவர் தனது பெண் குமருகளை கரை சேர்க்கப் வரதட்சணைப் பணம் இல்லாததால் ஆயுள் காப்புறுதி செய்து விட்டு, லாரியில் மோதி தற்கொலை செய்து கொண்டார்.
இது தற்கொலை என்பதால் அவரது குடும்பம் குடும்பத் தலைவனையும் இழந்து காப்புறுதிப் பணமும் கிடைக்காமல் தவித்தது. வரதடசணையின் இக்கோர முகம் இவர்களது வாழ்வில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.அப்போது, ஏகத்துவக் கொள்கையில் பெரியளவு தெளிவு கிடைக்காத நேரம். இப்போதது, வரட்சணைக்கு எதிரான பிரசாரத்தை பீஜே அளவுக்கு யாரும் செய்யவில்லை. அறியாமல் வாங்கிய வரத்சணையை திரும்பக் கொடுக்கும் அளவு பெரும் தாக்கத்தை அவரது பிரசாரம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார நிலை :
மார்க்கப் பிரசாரப் பணியில் ஈடுபடுகின்றவர்களின் பொருளாதாரம் சரியானதாக இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.அதனால்,பீஜேவுடைய பொருளாதார நிலை பற்றி முதலில் இங்கு குறிப்பிடுகின்றோம். இன்று மார்க்கப் பிரசாரத்திற்காக பலர் அறபு நாடுகளில் சம்பளம் பெற்று,தமது வாழ்வை வளப்படுத்திக் கொள்கின்றனர். இன்றைய உலமாக்களில் பலர் மார்க்கப் பிரசாரம் செய்கிறோம் என்ற பெயரில் வெளிநாடுகளில் ரியால்,தீனார்,திர்ஹம் எப்பவற்றிற்காக தஞ்சமடைந்தவர்களாகவே உள்ளனர். அல்லது வெளிநாட்டுக் காசை நம்பி உள்நாட்டில் மார்க்க வியாபாரம் செய்பவர்கள். சொகுசாக இருந்து கொண்டு,ஒன்றிரண்டு பயான்கள் செய்து,உப்புச் சப்பில்லாத கட்டுரை எழுதிக் கொண்டு,பீஜேவுடைய பயானைக் கேட்டு கட்டுரைகளைக் காப்பி பண்ணிவிட்டு பிரசாரம் செய்வதாக சொல்லிக் கொள்பவர்கள்.
இத்தகையவர்களில் ஒருவராக இருந்துகொண்டு, அற்ப நலன்களுக்காக ஜால்ராப் போடும் சிலர் பீஜே பொருளாதாரம் பற்றி அண்மையில் கேள்வி எழுப்பினர் அவதுாறு பரப்பினர். அதற்குப் பீஜே அளித்த பதிலை இங்கு தருகின்றோம்.
எனது சொத்து, எனது பொருளாதார நிலை குறித்து பொதுவாக நான் அதிகம் பேசுவதில்லை.இது போல் சீண்டும் போது மட்டுமே நான் பேசி இருக்கிறேன். இது குறித்துப் பேசும் போது நான் எதையோ எதிர்பார்ப்பதாக நினைத்து விடுவார்களோ என்று நினைத்து, பேசுவோர் பேசிக் கொள்ளட்டும் என்று இருந்து வருகின்றேன். இப்போது நாம் யுத்த களத்தில் நிற்கும் போது நீங்கள் கேட்பதால் நான் பதில் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.முதல் எனது சொத்து விபரத்தைத் தந்து விடுகிறேன்.
நான் 25 ஆண்டுகளில் சம்பாதித்த எனது மொத்த சொத்தின் மதிப்பு, ஒரு சிலர் பள்ளிவாசல் கட்டுவதற்குக் கமிஷன் அடிக்கிறீர்களே அதை விடக் குறைவு தான். மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நிஜமாகத் தான் சொல்கிறேன். உள்ளது. இரண்டு கிரவுன்ட் அளவு.
நான் தற்போது சென்னையில் சிறிய வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊரில் எனது தந்தையிடமிருந்து வாரிசாகக் கிடைத்த ஒரு வீட்டு மனை உள்ளது. இரண்டு செண்டுக்கும் குறைவான சுமார் 800 சதுர அடி அளவுடையது. இது எனது சம்பாத்தியம் அல்ல.எனது குடும்ப நகைகளை விற்று மதுரையில் நான் ஒர் அச்சகம் நடத்தினேன். மிஷினை நானே இயக்குவேன்!பைண்டிங் செய்வேன்!இன்னும் அச்சு சம்மந்தமான அனைத்து வேலைகளையும் நானே செய்து வந்தேன். இதனிடையே தான் தாஃவா பணியையும் செய்து வந்தேன்.
தமுமுக ஆரம்பித்த பின் அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு நான் சென்னையில் இருக்க வேண்டும் என்று நண்பர்கள் வற்புறுத்தியதால் நான் சென்னைக்கு வருவதற்காக அச்சகத்தை விற்றேன். எனது ஊரைச் சேர்ந்த தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் தம்முடைய ஒரு வீட்டை விற்க இருப்பது தெரிந்ததால் அச்சகத்தை விற்ற பணத்தில் அந்த வீட்டை வாங்கினேன்.எனது பூர்வீக இடத்தில் சொந்த வீடு ஒன்று கட்டினால் நல்லது என்று நான் நினைத்த போதுஇ அதற்கான நிதி என்னிடம் இல்லை. அப்போது நான் வாங்கிய வீடு நல்ல விலைக்குப் போகிறது என்பது தெரிந்ததால் அதை விற்று விட்டு உங்கள் பூர்வீக இடத்தில் வீடு கட்டலாமே என்று ஹைதர் அலி ஆலோசனை கூறினார். அதை விற்று (அப்போது ஐந்து இலட்சம் என்று நினைவு) அதில் தான் எனது பூர்வீக இடத்தில் நான்கு லட்சம் ரூபாயில் ஒரு பெட்ரூம் உள்ள சிறு வீடு கட்டினேன்.
அந்த வெள்ளை மாளிகையைப் பற்றி இலங்கையைச் சேர்ந்த ரஸ்மி (முஜீப் விவாதத்துக்காக தொண்டி வந்திருந்தார்.) அவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.(இவரும் இவரது நண்பர்கள் சிலரும் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டாலும், எனது பொருளாதார நிலையை அறிந்து கொள்வதற்காக இரகசிய வருகை தந்தனர். இஸ்மாயீல் ஸலபி வகையறாக்கள் பணம் பண்ணுவதற்காக தவ்ஹீத் பேசுவது போல் பீஜேயும் பேசுகிறாரா என்று ஆராய்வதற்காகவே ஒரு குழுவாக வந்தார்கள். எனக்குத் தெரியாமல் நான் வாடகைக்குக் குடியிருக்கும் சிறிய வீட்டையும் எனக்கு என்று சொந்தமாக எந்தச் சொத்தும் இல்லை என்பதையும் விசாரித்து அதன் பிறகு தான் தவ்ஹீத் ஜமாஅத்தில் தீவிர ஈடுபாட்டுடன் உள்ளனர். பிற்காலத்தில் இதை என்னிடம் அவர்களே சொல்லிக் காட்டினர்.)
வீடு கட்டுவதற்குப் போக மீதமுள்ள தொகை ஒர் இலட்சத்துடன் முப்பதாயிரம் சேர்த்து ஒர் இலட்சத்தி முப்பதாயிரம் ரூபாய்க்கு ஹைதர் அலி ஆலோசனையின் பேரில் எனது ஊருக்கு அருகில் ஒரு வயல் வாங்கினேன்.எனது பூர்வீக வீடும் அந்த வயலும் தான் என்னிடம் உள்ள அசையாச் சொத்துக்கள்.மதுரையில் இருந்த போது, நல்லூர் என்ற கிராமத்தின் அருகில் மிகக் குறைந்த விலைக்கு மணை கிடைக்கிறது என்று சிலர் கூறியதை நம்பி (1990 இருக்கும் என்று நினைக்கிறேன்.) 3000 ரூபாய்க்கு ஒரு மனை வாங்கினேன். மக்கள் குடியேறாத பகுதியில் உள்ள அந்த இடம் இருக்கிறதா? யாரும் ஆக்ரமித்துக் கொண்டார்களா என்பது தெரியவில்லை.
என் பெயரிலோ என் மனைவியின் பெயரிலோ எந்த வங்கிக் கணக்கும் இல்லை. வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளாதவன் இந்தக் காலத்தில் நானாகத் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். எனது மூன் பப்ளிகேஷன் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளது. அதில் புத்தகங்கள் விற்பது தொடர்பான வரவு செலவு தவிர வேறு எந்த வரவு செலவும் இல்லை. அதை நான் இயக்குகிறேன்.என் மகன் பத்துக்கு பத்து அளவில் சிறிய கடை வைத்துள்ளார். இரண்டாம் மகன் இந்து சகோதரருக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.
நாங்கள் மூவரும் உழைத்துத் தான் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறோம். நாங்கள் மூவரும் உழைப்பது சொத்துக்கள் வாங்குவதற்குப் போதுமானது அல்ல.
இதைத் தவிர வேறு ஏதாவது சொத்துக்கள் என் பெயரிலோ என் மனைவி பெயரிலோ என் பிள்ளைகள் பெயரிலோ இருந்தால் இஸ்மாயீல் சலபிக்கு நான் இலவசமாக அளிக்கத் தயாராக இருக்கிறேன். அல்லது யாரெல்லாம் இது பற்றி பேசித் திரிகிறாரோ அவர்கள் அனைவருக்குமே இதைக் கூறிக் கொள்கிறேன். அவர்கள் இது தவிர என் பெயரிலோ என் மனைவி மக்கள் பெயரிலோ சொத்துக்கள் இருந்தால் இலவசமாகவே அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
எனக்கு இருக்கும்(?) சொகுசு பங்களாக்கள், கார்கள், பண்ணை வீடுகள் அனைத்தையும் இஸ்மாயீல் ஸலபிக்குத் தந்து விடுகிறேன்.அல்லது யாரெல்லாம் இது பற்றி பேசித் திரிகிறாரோ அவர்கள் அனைவருக்குமே இதைக் கூறிக் கொள்கிறேன்.இது போன்ற கிறுக்குத் தனங்களுக்கு ஒரு மனிதன் பதில் சொல்லாமல் இருந்தால் எதை வேண்டுமானாலும் சொல்வீர்களா?
நான் மதுரையில் அச்சகம் நடத்திக் கொண்டிருந்த போது, சில இளைஞர்கள் வந்தனர். பத்துப் பேர் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.அவர்கள் வந்த போது, கையால் இயக்கப்படும் கட்டிங் மிஷினில் நான் பேப்பர் கட்டிங் செய்து கொண்டிருந்தேன். வந்தவர்கள் என் காலையே பார்த்தார்கள். என்ன விபரம் என்று கேட்ட போது, நீங்கள் இரண்டாயிரம் ரூபாய் செருப்பு போட்டிருப்பதாகச் சொன்னார்கள். அதைத் தான் பார்க்க வந்தோம் என்று கூறினார்கள். நான் ஹவாய் செருப்பு அணிதிருந்ததையும் உடலுழைப்பு செய்ததையும் பார்த்து விட்டு அதன் காரணமாக தவ்ஹீதுக்கு வந்தார்கள்.இது போல் நீங்கள் அவதூறு பரப்பியதால் தால் சத்தியம் வளர்ந்து கொண்டிருக்கிறது.இப்படி எல்லாம் சிலர் நினைப்பதற்குக் காரணம் உள்ளது.
(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர் (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (திருக்குர்ஆன் 2:273)