-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஞாயிறு, ஆகஸ்ட் 19

ஃபித்ரா-பெருநாள்-ஆறு நோன்பு!


நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிந்தோருக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு என அல்லாஹ் வாக்களித்துள்ளான். (அல்குர்ஆன் 5:9)

நோன்புப் பெருநாளை ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் காட்டியுள்ள அழகிய செயலே ஸதக்கத்துல் ஃபித்ர் என்னும் இந்த நோன்புப் பெருநாள் தர்மம். நோன்புப் பெருநாள் தர்மத்தை ஒவ்வொரு முஸ்லிமும் கொடுக்க வேண்டிய கட்டாயக் கடமையாகும்.

அடிமைகள், அடிமைகள் அல்லாதவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரிச்சம்பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிலிருந்து ஒரு ஸாவு எனும்(அளவை) நபி(ஸல்) அவர்கள் நிர்ணையித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: புஹாரி 1503, முஸ்லிம்


மேலே கூறப்பட்ட ஹதீஸில், நோன்புப் பெருநாள் தர்மம் என்பது நமக்கெல்லாம் கட்டாயக் கடமை என்பதும், அதைப் பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் கொடுத்து விட வேண்டும் எனவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் பெருநாள் தர்மத்தின் நோக்கம் பற்றி நபி(ஸல்) அவர்கள் கீழ்கண்டவாறு கூறினார்கள். 

நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்கு பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் (பெருநாள்) தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்கள்: அபூதாவூத்

மேலே கூறப்பட்ட ஹதீஸில் ஏழைகள் மகிழ்வுடன் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் பெருநாள் தொழுகைக்கு முன்பு கொடுப்பதையும், பின்பு கொடுப்பதையும் நபி(ஸல்) அவர்கள் வேறுபடுத்திக் காட்டியுள்ளார்கள். பெருநாள் தொழுகைக்குப் பினனால் கொடுத்தால் ஏழைகளுக்கு பெருநாள் கொண்டாட உதவாது என்பதால் அதை சாதாரண தர்மம் எனக் கூறுகிறார்கள்.

யாருக்குக் கடமை!

மேற்கண்ட ஹதீஸில், நோன்பில் ஏற்படும் தவறுகளுக்கு பரிகாரமாக இந்த தர்மம் கடமையாக்கப்பட்டதாக கூறினாலும், நோன்பு நோற்காதவர்களுக்கும் இது கடமையாகும். மேற்கண்ட ஹதீஸில் நோன்பின் தவறுகளுக்கு பரிகாரமாக வேண்டும் என்றும், ஏழைகள் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்றும் இரு நோக்கங்கள் விளக்கப்பட்டுள்ளன.

நோன்பு நோற்றவர்கள் இந்த இரு பயன்களையும் பெற்றுக் கொள்ளலாம். நோன்பு நோற்காதவர்கள் ஏழைகள் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாட உதவுவதால் ஏற்படும் நன்மையைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே ஒருவர் தமக்காகவும், தமது பெற்றோர், மனைவி, பிள்ளைகள் மற்றும் தமது பராமரிப்பிலுள்ள அனைவருக்காகவும் இந்த பெருநாள் தர்மத்தை வழங்க வேண்டும். 

ஃபித்ராவின் அளவு!

தமது பராமரிப்பிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு 'ஸாவு' அளவு என நபி(ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளார்கள். ஸாவு என்பது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்த ஒரு முகத்தல் அளவையாகும். இரு கைகள் கொள்ளுமளவுக்கு அரிசியை நான்கு தடவை அள்ளினால் எவ்வளவு வருமோ அந்த அளவே ஒரு 'ஸாவு' (சுமார் இரண்டரை கிலோ) எனப்படும்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு ஸாவு உணவை நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கி வந்தோம். எங்களின் அன்றைய உணவு தீட்டப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக்கட்டி, பேரிச்சம்பழம் ஆகியவை தான். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) நூல்: புஹாரி 1510
எப்படி கொடுப்பது?!

ரமளானின் ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் நபி(ஸல்) அவர்கள் என்னை நியமித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புஹாரி 3275, 5010

நாஃபிஉ (ரஹ்) கூறுகிறார்கள்...

மேலும் பெருநாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித் தோழர்கள் (இந்த தர்மத்தைக்) கொடுத்து வந்தார்கள். (புஹாரி 1511)

நபி(ஸல்) அவர்கள் பேரீச்சம்பழத்தில் ஒரு ஸாவு என்று நோன்புப் பெருநாள் தர்மத்தை நிர்ணயம் செய்திருந்தார்கள். ஒரு மனிதர் மட்ட ரகமான பேரிச்சம்பழங்களை கொண்டு வந்தார். அதை நபி(ஸல்) அவர்கள் (பெற்றுக் கொள்ளாமல்) இந்த பழத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ரவாஹா(ரலி) நூல்கள்: ஹாகீம்

இதன் மூலம் தர்மம் செய்யப்படும் பொருள் தரமானதாகவும், நிறைவானதாகவும் இருக்க வேண்டும். மேலும் ஃபித்ராவை குறிப்பிட்ட நேரத்திற்குள் கொடுத்துவிட வேண்டும் என்பதையும், கூட்டாக வசூலித்து வினியோகம் செய்யலாம் என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.

பெருநாளின் சிறப்பு!

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவை வந்தடைந்த போது மதீனாவாசிகளுக்கு விளையாடுவதற்கென இரண்டு நாட்கள் இருந்தன. அந்த இரு நாட்களில் மதீனா வாசிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் இந்த இருநாட்கள் எவ்வகையைச் சேர்ந்தது எனக் கேட்டார்கள்? அதற்கு அவர்கள் அறியாமைக் காலத்தில் (இந்த நாட்களில்) நாங்கள் விளையாடக் கூடியவர்களாக இருந்தோம். என்றனர். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், நிச்சயமாக அல்லாஹ் அவ்விரு நாட்களை விடச் சிறந்ததாகவும், அவ்விரு நாட்களுக்கு பதிலாகவும் அள்ஹா (எனும் ஹஜ்ஜுப் பெரு) நாளையும், 'பித்ரு (எனும் ரமளான் பெரு) நாளையும் வழங்கியிருக்கிறான். என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: ஸஹீஹ் அபூதாவூத் 1004

இந்த இரண்டு நாட்களிலும் தொழுவது, குத்பா (பிரசங்கம்) செய்வதும் கேட்பதும், வேறு சில கடமைகளை செய்வதும் நபிவழியாகும்.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு மற்றும் ஹஜ்ஜு பெருநாட்களில் முஸல்லா எனும் மைதானத்திற்கு செல்பவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர் : அபு ஸயிது அல் குத்ரி(ரலி) - புஹாரி 956

இந்த ஹதிஸின் அடிப்படையில் பெருநாள் தொழுகையை பள்ளியில் தொழாமல் திடலுக்கு சென்று தான் தொழ வேண்டும். அதுவும் நாம் வாழ்ந்து வரும் துபையில் பிரத்தியேகமாக பெருநாள் தொழுகைக்கென்றே ஈத்கா அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு சென்று தான் தொழ வேண்டும். 

'நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், 2வது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறுவார்கள். இவ்விரண்டு தக்பீர்களையும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) – திர்மிதி 492, அபுதாவுத்

சாதாரண தொழுகையில் உள்ள எல்லா அம்சங்களும் பெருநாள் தொழுகையில் உண்டு. 12 தக்பீர்கள் மட்டும் தான் மேலதிகமான செயலாகும். 

அதே போல் இவ்வாறு இமாம் தக்பீர் கூறும் போது கைகளை காது வரை உயர்த்தி அவிழ்த்து கட்டும் முறை பரவலாக காணப்படுகிறது. ஆனால் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் அவ்வாறு இருந்ததாக ஹதீஸ்களில் காணப் படவில்லை. ஏனெனில் தக்பீர் என்பது வாயால் சொல்வது தான் என்பதை நாம் விளங்கி செயல்பட வேண்டும். ஆதாரமில்லாத செயல்களை செய்து நம் தொழுகைகளை பாழ்படுத்தி விடக்கூடாது.

 பெருநாள் தினங்களில் தக்பீர் என்ற பெயர்களில் நாம் பல விதமான வாசகங்களை சொல்லி வருகிறோம். அவ்வாறு ஓதுவதற்கு நபிவழியில் எந்த விதமான ஆதாரமும் இல்லை. வரக்கூடிய ஹதீஸ்கள் அத்தனையும் பலவீனமானவையாகும். எனவே இவ்வாறு ஓதுவதை விட நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த திக்ருகளை அதிகமதிகம் ஓதலாம். மேலும் பெருநாள் தொழுகை முடிந்தவுடன் உரை நிகழ்த்துவார்கள்.

'நபி(ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்கு) தயாராகி தொழுகையை துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்கள் பகுதிக்கு சென்று பிலால்(ரலி) உடைய கை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்கு போதனை செய்தார்கள்.  அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) - புஹாரி 961

இதனடிப்படையில் குத்பா உரையை கேட்க வேண்டும் என அறிய முடிகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலோர் தொழுகை முடிந்தவுடன் இடத்தை விட்டு வெளியேறி விடுகிறோம். ஆனால் நபி(ஸல்) அவர்கள் பெண்கள் பகுதிக்கும் சென்று உரை நிகழ்த்தினார்கள் என்றால் பெருநாள் உரை எந்தளவுக்கு அவசியம் என்பதை உணர்ந்து உரை முடிந்தவுடன் கலைந்து செல்வது தான் நபி வழியாகும்.

பெருநாள் தொழுகையில் பெண்கள்!

'பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் எனவும் கூடாரத்திலுள்ள கண்ணிப் பெண்களையும், மாதவிடாய் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்கு பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆ செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர் : உம்மு அதிய்யா(ரலி)- புஹாரி 971

பாதையை மாற்ற வேண்டும்!

பெருநாள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள்அ ஒரு (போவதற்கும்  வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள்.  அறிவிப்பவர் : ஜாபிர்(ரலி) நூல்கள்: புகாரி 986

ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால்...

'இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்து உள்ளன. யார் இந்த பெருநாள் தொழுகையை தொழுகின்றாரோ அவர் ஜும்மா தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜும்மா தொழுகையை நடத்துவோம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   அறிவிப்பவர் : அபுஹுரைரா(ரலி) - அபுதாவுத் 907

ஷவ்வால் மாத ஆறு நோன்பு!

அதேப்போல் ரமளான் முடிந்ததும் ஷவ்வால் மாதத்தில் நோன்பு நோற்க நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

'யார் ரமளான் மாதம் நோன்பு நோற்று அதை தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நாட்கள் நோன்பு நோற்கின்றாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் :  அபூ அய்யுப்(ரலி) நூல்கள்: முஸ்லிம் 1984, திர்மிதி, அபுதாவுத்

மேலும் நம் பகுதியிலுள்ள மக்கள் இந்த நோன்பை பெண்களுக்கு உண்டானது என்று கூறி ஆண்கள் அலட்சியமாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் அல்லாஹ்வும் அவனது ரஸுலும் அப்படி கட்டளையிடவில்லை. அதனால் சுன்னத்தான நோன்பு தானே என அலட்சியமாக இருக்காமல் அல்லாஹ்வின் அன்பைப்பெற முயற்சிக்க வேண்டும். 

பெருநாளை தொடர்ந்து ஷவ்வால்  மாதம் முழுவதும் நமக்கு வசதியான நாட்களில் இந்த ஆறு நோன்புகளையும் நோற்று காலமெல்லாம் நோன்பு நோற்ற பலனை அடைந்திட முயற்சி செய்ய வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர் மீதும் அருள் செய்திடுவானாக!

இந்த ஸதக்கத்துல் ஃபித்ர் எனும் தர்மம் அனைத்து ஏழைகளுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வும், அவனது ரஸுலும் காட்டித்தந்த வழியில் ஆண்டுதோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உலகம் முழுவதும் உள்ள தமிழ் முஸ்லிம்களிடமிருந்து வசூல் செய்து தாயகத்திலுள்ள ஏழைகளைச் தேடிச்சென்று பெருநாளை அவர்களும் மகிழ்வுடன் கொண்டாட தேவையான உணவுப் பொருட்களை கண்ணியமான முறையில் வினியோகம் செய்து அல்லாஹ்வின் பேரருளால் அரும்பணியாற்றி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அதன் முறையான கணக்கு விபரங்களை உணர்வு வார இதழில் வெளியிட்டு வருகிறது. சென்ற ஆண்டு வளைகுடா வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களிடம் மட்டும் வசூல் செய்த   தொகை  ஏறத்தாழ  ரூ.8லட்சம்.அதை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்துள்ளது. எனவே இவ்வருடமும் தங்களின மேலான ஆதரவை அல்லாஹ்வுக்காக நல்கி ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

புதன், ஆகஸ்ட் 15

பர்மா (மியன்மார்) வில் தினமும் அழிக்கப்படும் முஸ்லீம்கள். – உலக நாடுகள் மவுனம் காப்பது ஏன்?

மியன்மார் என்று தற்போது அழைக்கப்படும் பர்மாவில் கடந்த சில நாட்களாக அங்கு வாழும் முஸ்லீம்களை அங்குள்ள அரசு துட்டுக் கொண்டு குவித்து வருகின்றது.
பா்மாவில் வாழும் மக்களில் சுமார் 15 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் முஸ்லீம்கள் அதில் 10 லட்சம் பேர் பர்மாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பர்மியர்கள் 5 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் வங்காலத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள்.
எகிப்தில் இருக்கும் ஒரு ஷரீஆ கல்லூரியில் கல்வி பயின்று வரும் பர்மாவைச் சேர்ந்த முஸ்லிம் இளம் பெண்மணி ஆயிஷா ஸூல்ஹி இது தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துக்கள் பர்மாவில் வாழும் முஸ்லீம்களின் தற்போதைய நிலையை தெளிவாக விளக்குகின்றது.
“அல் வதனுல் மிஸ்ரிய்யா” என்ற பத்திரிக்கைக்கு ஆயிஷா ஸூல்ஹி அளித்துள்ள பேட்டியில் பின்வரும் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பர்மாவில் உள்ள முஸ்லிம்களுக்கு மதுபானம், பன்றி இறைச்சி அல்லது மரணம் இந்த மூன்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ள முடியும் என்று துன்புறுத்தப் படுகின்றார்கள். ஆனால் அங்குள்ள முஸ்லீம்கள் மரணத்தைத் தான் தங்கள் தேர்வாக எடுத்துக் கொள்கின்றார்கள்.
பர்மாவில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளை கண்டும், கேட்டும் நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன். எனது நாட்டைச் சார்ந்தவர்கள் கூட்டாக கொலைச் செய்யப்படும் பொழுது எவ்வாறு நாம் மெளனமாக இருக்கமுடியும்?
பர்மா முஸ்லிம்கள் இரத்த சாட்சிகளை மற்றவர்களுக்கு கொடையாக வழங்குகின்றார்கள் என்பதுதான் மிக முக்கிய செய்தியாகும்.
பல தினங்களாக நான் எனது குடும்பத்தினரை தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால், தாக்குதலில் அவர்களுடைய வீடுகள் தகர்க்கப்பட்டு பங்களாதேசுக்கு அகதிகளாக அவர்கள் சென்றுள்ளனர். எனது சில உறவினர்களும், நண்பர்களும் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடுமை இழைக்கப்படுகின்றனர்.” இவ்வாறு ஆயிஷா ஸூல்ஹி கூறியுள்ளார்.
முஸ்லீம்கள் பற்றி வாய் திறக்காத ஆங் சாங் சூகி.
ஜனநாயக ரீதியில் போராடியமைக்காக பல ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டவரும், பர்மாவின் முக்கிய எதிர்க் கட்சியான நேசனல் லீக்ஃபார் டெமோக்ரெஸியின் (என்.எல்.டி) தலைவரும் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றவருமான “ஆங் சாங் சூகி” முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை தொடர்பில் இது வரைக்கும் மவுனம் சாதித்து வருவது அங்குள்ள முஸ்லீம்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆங் சாங் சூகியின் மவுனம் தொடர்பில் பங்காஷ் பிரஸ் டி.வி யில் கருத்து வெளியிட்ட “ஷஹீத் சுல்ஃபிகர் அலி பூட்டோ இன்ஸ்ட்யூட் ஆஃப் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜியின் பேராசிரியரும், பிரபல அரசியல் பகுப்பாய்வாளருமான குலாம் தாகி” அவர்கள் “ஆங் சாங் சூகி” யின் மவுனம் குற்றகரமானது என சாடுகின்றார்.
கடந்த மாதம் ஜெனீவாவில் வைத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த “சூகி” பர்மா முஸ்லீம்கள் அந்நாட்டு குடிமக்கள் தானா? என்ற கேள்விக்கு தெரியாது என்று லாவகமாக பதிலளித்து தப்பித்துக் கொண்டார்.
சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றவர் தனது நாட்டின் குடிமக்கள் தாக்கப்படுவது குறித்து அமைதியாக இருப்பதும், அவர்கள் தனது நாட்டினர் தானா என்பதே தெரியாது என்று சொல்வதும் ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த கொடூர நிகழ்வுகள் தொடர்பில் இது வரைக்கும் எந்த உலக நாடுகளும் வாய் திறக்காமல் மவுனம் காக்கின்றன. குறிப்பாக எந்த அரபு நாடும் இது தொடர்பில் கருத்துக்களோ கண்டனங்களோ தெரிவிக்கவில்லை. என்பது மிகவும் வருந்தத் தக்க விஷயமாகும்.
அன்பின் இஸ்லாமிய உறவுகளே!
பர்மாவில் நமது சகோதரன் கொல்லப்படுகின்றான், நம் சகோதரிகள் கற்பழிக்கப்படுகின்றார்கள், இவர்களுக்காக நமது இரு கரங்களையும் ஏந்தி ஏக இறைவனிடம் பிரார்த்திக்குமாறு அன்பாய் வேண்டுகின்றோம்.
 
 
 

செவ்வாய், ஆகஸ்ட் 14

பெருநாள் கொண்டாட்டமும், கொலைவெறி சுடிதாரும்.


பெருநாள் கொண்டாட்டமும், கொலைவெறி சுடிதாரும்.

புனிதமிக்க ரமழான் மாதம் முடிவுறும் தருவாயில் ஈகைத் திருநாளான நோன்புப் பெருநாளை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த சந்தர்ப்பத்தில் பெருநாள் சந்தோஷத்தைக் கழிப்பதற்காக இஸ்லாமியர்கள் புத்தாடை வாங்கும் படலத்தை நோன்பின் ஆரம்பத்திலேயே துவக்கிவிட்டார்கள். பெருநாளைக்காக புத்தாடை அணிவதை இஸ்லாம் தாராளமாக வரவேற்கின்றது. புத்தாடை அணிய வேண்டும்.
ஆனால் பெருநாள் சந்தோஷத்தைக் கழிப்பதற்காக ஆடை வாங்குவதாகக் கூறிக் கொண்டு புனிதமிக்க இறுதிப் பத்தின் புனிதமான நேரங்களை வீனடிப்பதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிப்பதில்லை.
ரமழானின் இறுதிப் பத்தை எடுத்துக் கொண்டால் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் குடும்பத்துடன் இரவு, பகல் என்று பாராமல் ஆடைக் கடைகளில் நிறம்பி வழிவதைக் காண முடிகின்றது. இறுதிப் பத்தென்றாலே பெருநாள் ஆடை வாங்குவதற்குறிய நாட்கள் தான் என்பதைப் போல் மக்கள் மத்தியில் ஒரு நிலைபாடு உருவாகியிருக்கிறது.
கொலைவெறி சுடிதார் தான் எனக்கு வேண்டும்.
இதே நேரம் இஸ்லாத்தை படித்து அதன்படி குழந்தைகளை வளர்க்க வேண்டிய பெற்றோர் சினிமாவின் நிழலில் பிள்ளைகளை வளர்த்தெடுப்பதின் விளைவு, பெருநாள் ஆடையைக் கூட சினிமாக்காரனின் ஆடையாக இருக்க வேண்டும் என்று நம் பிள்ளைகளும், பெற்றோர்களும் விரும்புகின்றார்கள்.
பெருநாள் தினம் நெருங்கிவிட்டாலே சினிமா திரைப்படங்களின் பெயர்களிலும், ஹீரோ, ஹீரோயின்களின் பெயர்களிலும் தான் ஆடைகள் கூட வெளியிடப்படும். காரணம் மக்கள் சினிமா மேல் வைத்துள்ள மோகத்தை வியாபாரமாக்குவதுதான் வியாபாரியின் யுக்தி.
இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள இரு பெருநாட்களிலும் பெருநாள் அல்லாத நாட்களிலும் இஸ்லாம் காட்டித் தந்த அடிப்படையில் தான் நமது ஆடைகள் இருக்க வேண்டுமே தவிர நாம் நினைப்பதைப் போல் மார்க்கத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் விதமாக இருக்கக் கூடாது.
முழு கையையும் மணிக்கட்டு வரை மரைக்க வேண்டிய பெண்கள் முழுக் கையையும் திறந்து கொண்டு, இறுக்கமாக ஆடை அணிந்து மறைக்க வேண்டிய பகுதிகளையும் திறந்து கொண்டு திரியக் கூடிய காட்சியை அன்றாடம் காண முடிகின்றது.
திருமறைக் குர்ஆன் நமக்கு சொல்லும் அறிவுரையைப் பாருங்கள்.
விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும்  அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
(அல்குர்ஆன் : 57 : 20)
மேற்கண்ட திருமறைக் குர்ஆன் வசனம் உலக வாழ்வின் யதார்த்தத்தை மிகத் தெளிவாக விளக்குகின்றது. உலகத்தை மழைக்கு ஒப்பாக்கிக் காட்டுவதின் மூலம் உலக வாழ்வு எப்படிப்பட்டது என்பதைப் பற்றி தெளிவாகின்றது.
இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா?
(அல்குர்ஆன் : 29 : 64)
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?
(அல்குர்ஆன் : 6 : 32)
பெருநாள் தினத்தை இஸ்லாம் எந்த முறையில் கொண்டாடும் படி பணித்துள்ளதோ அந்த முறையில் மார்க்கத்திற்கு உட்பட்டு கொண்டாடி மகிழ்வோமாக!

வியாழன், ஆகஸ்ட் 9

பாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்.



புனித மிக்க ரமழான் மாதத்தின் இறுதிப்பத்தை நாம் நெருங்கியிருக்கும் இவ்வேலையில் இந்த இறுதிப்பத்தின் மகத்துவத்தையும், கண்ணியத்தையும் மிகவும் தெளிவாகவும், ஆழமாகவும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இன்று நமது ஊர்களில் ரமழான் மாதம் முழுவதும் தூய்மையான முறையில் மார்க்கக் கடமைகளை செயல்படுத்த வேண்டியவர்கள் மார்க்கத்திற்கு முரனான பல காரியங்களை செய்து கொண்டிருப்பதை கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.
அதிலும் குறிப்பாக இந்த ரமழானின் இறுதிப் பத்தில் லைலதுல் கத்ர் இரவை அடையப் போகின்றோம் என்று கூறி 27 வது இரவில் மாத்திரம் நின்று வணங்கி தவ்பா என்ற பெயரில் ஆலிம்கள் சொல்லிக் கொடுக்கும் வாசகங்களை கிளிப் பிள்ளை போல் மனப்பாடத்தில் சொல்லிவிட்டு ஒரு வருடம் செய்த பாவமும் இந்த 27 வது நாளில் கேட்ட தவ்பாவினால் மண்ணிக்கப்பட்டு விட்டது என்று எண்ணிக் கொண்டு குதூகலிக்கிறார்கள்.
இறுதிப்பத்து நாட்களின் மகிமையும், லைலதுல் கத்ர் இரவின் மகத்துவமும் தெரிந்தால் இவர்கள் இப்படி இந்த குறிப்பிட் நாட்களை வீனாகவும், மார்க்கத்திற்கு முரனாகவும் கழிக்க மாட்டார்கள்.
இதோ கடைசி பத்து நாட்களின் தூய்மையையும், மகத்துவத்தையும் பாருங்கள்.
ஆயிரம் மாதங்களின் நன்மை ஒரே இரவில்.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)
முன் செய்த பாவங்கள் அழிக்கப்படுகின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)
ஆயிரம் மாதங்களுக்கு நிகரான நாள் எது?
லைலதுல் கத்ர் என்ற இரவுக்கு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்ற சிறப்பிருந்தாலும், அதை அல்லாஹ் எந்த நாள் என்று அறிவித்துத் தரவில்லை. நபியவர்களுக்குக் கூட அது இத்தனையாவது நாள் தான் என்பது தெரியாது. காரணம் அல்லாஹ் அவர்களுக்கு மறக்கடிக்கச் செய்துவிட்டான்.
நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)
நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.
ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997
கடைசிப் பத்தில் ஒற்றைப் படை இரவில் தேடுங்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, “அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லி விட்டு, “யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் (20700)
மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
27 வது இரவில் தான் லைலதுல் கத்ர் வருமா?
லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத் தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு, ரமலான் 27வது இரவு தான் என்று முடிவு செய்து பெரிய விழாவாகக் கொண்டாகிறார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? என்பதை நாம் பார்ப்போம்.
லைலதுல் கத்ரு இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி), நூல்: அபூதாவூத் (1178)
இது போன்ற சில செய்திகளை அடிப்படையாக வைத்து சிலர் லைலத்துல் கத்ர் இரவு 27வது இரவு தான் என்று கூறுகின்றனர்.
இந்த ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம் 27வது இரவு தான் என்று முடிவு செய்யலாம். ஆனால் இதற்கு மாற்றமாக நாம் முன்னர் குறிப்பிட்ட ஹதீஸில் லைலத்துல் கத்ர் இரவு என்பது நபி (ஸல்) அவர்களுக்கே மறக்கடிக்கப் பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு, கடைசிப் பத்தின் ஒற்றை நாட்களில் அதை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் 27 என்று குறிப்பிட்டுள்ளது போல் 23 என்றும் வந்துள்ளது. அவற்றை பாருங்கள்.
ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 23வது இரவு என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி), நூல்: அஹ்மத் (15466)
இதைப் போன்று 21, 23, 25 என்று மூன்று இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.
“ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள். லைலதுல் கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில், இருபத்தி மூன்றாவது இரவில், இருபத்தி ஐந்தாவது இரவில் தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2021
இதைப் போன்று 23, 29 இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.
“லைலதுல் கத்ரு இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது. அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2022
இப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன் சரியான கருத்து என்ன? என்பதற்கு இமாம் ஷாஃபீ அவர்கள் தெளிவான விடையை கூறியுள்ளார்கள்.
இப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு விளக்கம் அளித்த இமாம் ஷாஃபி அவர்கள், “நபியவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம் உள்ளவர்கள். இந்த இரவில் நாங்கள் லைலத்துல் கத்ரைத் தேடலாமா?’ என்று கேட்கும் போது அந்த இரவில் தேடுங்கள். என்று பதிலளித்திருப்பார்கள்” என்று கூறுகிறார்கள். (திர்மிதீ 722)
அதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில் லைலத்துல் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 23வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப் பற்றியும் கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்திருப்பார்கள். எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள் பற்றியும் ஹதீஸ்களில் இடம் பெற்று இருக்கிறது. இந்தக் கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.

செவ்வாய், ஆகஸ்ட் 7

லைலதுல் கத்ரின் சிறப்புகள்


ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்…
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறைவரை இருக்கும்.
(அல்குர்ஆன் 97:1-5)
முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத் துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி (35)

திங்கள், ஆகஸ்ட் 6

பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்.


பெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தாஅணிகின்றனர்?’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.
தென் கலிஃபோர்னியா இஸ்லாமிய மையத்திலுள்ள மஸ்ஜிதுக்குச் செல்லும்போது மட்டும் பர்தா அணிவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அத்துடன் கைகளையும், கால்களையும் மறைக்கும் நீண்ட உடைகளையும் அணிந்து வந்தேன். பிறகு படிப்படியாக தோழிகளின் வீடுகளுக்குச் செல்லும்போது பர்தாவுடன் சென்றேன். கடைசியாக, வசந்தகால விடுமுறைக்குப் பிறகு கல்விக்கூடத்திநற்குச் செல்லும்போது பர்தாவைத் துணிந்து அணிந்து சென்றேன். பள்ளிக்கூடத்திற்கு பர்தாவுடன் செல்வதைப் பற்றித்தான் மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். ஆனால், இப்புதிய அனுபவம் மிகவும் உற்சாகம் மிகுந்த அனுபவமாக அமைந்துவிட்டது


எல்லோரும் என்னை வியப்புடன் பார்ப்பது எனக்குள் மிகுந்த பரபரப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
வகுப்பு இடைவேளையின் போது சக மாணவிகள் பர்தாவைப் பற்றி பல கேள்விகளை எழுப்பினர். நான் பர்தா அணிந்திருப்பதைப் பார்த்த எனது ஆசிரியையும் அதன் காரணங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். ஆகவே, வரலாறு பாட வகுப்பின் போது அது பற்றி உரையாடலாம் எனக் குறிப்பிட்டார். இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்பு. திருமறை வலியுறுத்தும் பர்தாவின் பல நன்மைகளை எனது அனுபவத்தில் கண்டு கொண்டேன். முதலாவதாக, நான் பெண் என்று மரியாதை காட்டப்படுகிறது. ஒரு பால் பொருள் (Sex Object) என்று நோக்கப்படுவதில்லை. இரண்டாவதாக, நான் ஒரு இஸ்லாமியப் பெண் என்று மக்களால் அறியப்படுகிறது. பர்தா அணிவதன் மூலம் நான் மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், மற்றவர்கள் என்னைத் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. நான் பர்தா அணியவில்லை என்றால், அதைப்பற்றி கேள்விகள் யாரும் கேட்கப்போவதில்லை.
ஆகவே, எனது நெறியான இஸ்லாம் பற்றிய செய்திகளை விளக்குவதற்கு கடைசியில் வழிவகுக்கும். பர்தாவைப் பற்றிய ஐயங்கள் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடக்கூடும். பர்தா அணிதல் என்பது ஒருவரின் நெறியை பகிரங்கமாகப் பறைசாற்றுவதாகும். அதன் மூலம், ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடும். ஏனையவற்றைவிட மதத்தைப் பின் பற்றுதல் மிகவும் எளிதானது என்பதை உணர்த்துவதாக பர்தா அமைந்துள்ளது.
வீண் பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்பதை நான் நிச்சயமாக அறிந்து விடுவதைக் காட்டிலும், எனது தலைமுடிகள் பர்தாவினால் மறைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து விடுவது மிகவும் எளிதாகும். பர்தா அணிவதன் மூலம் ‘எனது குணநலன்களில் சிறந்த மாற்றங்கள்’ ஏற்பட்டுள்ளன. பர்தாவைப் பற்றி தவறான கருத்துக்களே மக்களிடம் இன்னும் நிலவி வருகிறது. ஏனெனில் மற்றவர்களை மதிப்பிடுவது என்பது மிகவும் எளிதாகும். பர்தா அணிந்த பெண்மணி ஒருவர் தனக்கு எதிரில் வரும் ஒருவரைப் பார்க்க நேரிடின், அவர் ‘நல்லவரா?’ அல்லது ‘கெட்டவரா?’ என்பதை எளிதில் மதிப்பிட்டு விடலாம்.
(இக்கட்டுரையாசிரியர் லைலா அஸ்கர், வெஸ்டர்ன் பிரிட்ஜ் (Western Bridge) பள்ளி மாணவி. இது அமெரிக்காவின் ‘லாஸ் ஏன்ஜல்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையாகும் 

ஞாயிறு, ஆகஸ்ட் 5

மறுமையில் கழுதையாக மாறும் தொழுகையாளிகள்.


தொழுகை என்பது இறைவனுக்கும், அடியார்களுக்கும் இடையில் இருக்கும் ஒரு 

முக்கியமான உரையாடல் நேரமாகும். இந்நேரத்தில் தொழுகையில் ஈடுபடும் தொழுகையாளிகள் இமாமை பின்பற்றி அவருடைய கட்டளைக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் உத்தரவாகும்.
ஆனால் இன்று தொழுகையில் ஈடுபடும் பெரும்பாலான தொழுகையாளிகள் இந்த விஷயத்தில் கவணம் எடுக்காமல் செயல்படுவது அவர்களை நரகத்தில் சேர்த்துவிடும் செயலாக மாறுகின்றது.
ஆம் தொழுவதின் மூலம் இறைவனிடம் பல நன்மைகளைப் பெற வேண்டும், மறுமையில் சுவர்கம் நுழைய வேண்டும் என்றெல்லாம் பலவாறு ஆசை வைக்கும் நம் சகோதரர்கள் தொழுகையில் இமாமை பின்பற்றும் விஷயத்தில் கவணயீனமாக இருக்கிறார்கள்.
நபியின் எச்சரிக்கை.
தொழுகையில் இமாமைப் பின்தொடர்ந்து தொழுபவர் இமாமுக்கு முன்பாக ருகூவு சுஜூது போன்ற காரியங்களை முந்திக்கொண்டு செய்தால் நாளை மறுமையில் அல்லாஹ் அவருடைய உருவத்தைக் கழுதையின் உருவமாக மாற்றி விடுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :உங்களில் ஒருவர் (தொழுகையில்) இமாமை முந்திக்கொண்டு தம் தலையை உயர்த்துவதால் அவருடைய தலையைக் கழுதையுடைய தலையாக அல்லாஹ் ஆக்கிவிடுவதை அல்லது அவருடைய உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி (691)
மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் ஐந்து நேர தொழுகையிலும் தவராமல் கலந்து கொள்ளும் அன்பர்களே! இந்த செய்தியை மனதில் பதிந்து கொள்ளுங்கள். ஏன் என்றால் நம்மில் பலர் இப்படித் தான் தொழுகின்றோம்.
இமாமின் கட்டளைக்கு செவிமடுக்காமல், அவரைப் பின் தொடராமல் நாம் நமது இஷ்டத்திற்கு செயல்படுகின்றோம். அப்படி செயல்படுவதினால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. மாறாக பாவத்தில் வீழ்ந்து நாளை மறுமையில் கழுதைக்கு ஒப்பான உருவத்தில் நாம் எழுப்பப் படுவோம் என்பதே மேற்கண்ட செய்தி விடுக்கும் எச்சரிக்கையாக இருக்கின்றது.
தொழுகையில் இமாமின் கட்டளைக்கு செவிசாய்த்து நாளை மறுமையில் வெற்றி பெறுவோமாக!