முஹர்ரம் பத்தும் மூடப் பழக்கங்களும்
ஃபிர்அவ்னைக் கடலில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றி, அவர்களுக்கு எகிப்தின் ஆட்சிப் பொறுப்பையும் வழங்கிய நாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள்.
மூஸா நபியை நம்பிய முஸ்லிம்களுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்குவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேறிய அந்த நாள் கர்பலாவால் மறைக்கப்பட்டு விட்டது.
கதிரவனை மறைக்கும் கிரகணத்தைப் போல ஆஷூரா தினத்தை, கர்பலாவும், அதையொட்டி ஷியாக்கள் கிளப்பி விட்ட மூடப் பழக்கங்களும் மறைத்து விட்டன. ஆஷூரா தினத்தை மையமாக வைத்து நடக்கும் பைத்தியக்காரத்தனமான செயல்பாடுகளையும், இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களையும், மாற்று மத அனுஷ்டானங்களையும் இப்போது பார்ப்போம்.
துக்க நாளாகி விட்ட ஆஷூரா
ஹுசைன் (ரலி) கொல்லப்பட்ட சோக சம்பவம் முஹர்ரம் பத்தாம் நாளில் நடந்ததால் அந்த நாள் துக்க நாளாக ஒரு போதும் ஆகி விடாது.
நபி (ஸல்) அவர்களிடம் திங்கள் கிழமை நோன்பு நோற்பது பற்றி வினவப்பட்ட போது, "அது நான் பிறந்த நாளாகும். அந்த நாளில் தான் நான் இறைத்தூதராக அனுப்பப் பட்டேன்'' என்று பதிலளித்தார்கள். (ஹதீஸ் சுருக்கம்)அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)நூல்: முஸ்லிம் 1387
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை மரணித் தார்கள்.(நூல்: புகாரி 1387)
உலக வரலாற்றில் மிக மிக அருளுக்கும் ஆசிக்கும் உரிய நாள் அல்லாஹ்வின் வேதம் இறங்கிய நாளாகும். அந்த நாளை நபி (ஸல்) அவர்களின் மரணம் மறைத்து விடவில்லை. உலகில் நபி (ஸல்) அவர்களை விட சிறந்தவர் யாரும் கிடையாது. அப்படிப்பட்ட அவர்களின் மரண நாள் நினைவு கூரப்படுவதற்கு மிகவும் பொருத்தமான நாளாகும்.
ஆனால் அந்த நாளையே நினைவு நாளாக, சோக நாளாக அனுஷ்டிக்க அனுமதியில்லாத போது மற்ற நாளை எப்படி சோக நாளாக அனுஷ்டிக்க முடியும்? இப்படியே இஸ்லாத்திற்காக உயிரை விட்ட நல்லவர்களின் மரண நாட்களைப் பார்த்தோம் எனில் நம் வாழ்நாளில் ஒரு நாள் கூட சந்தோஷ நாளாக இருக்காது. ஒவ்வொரு நாளும் துக்க நாளாகவே இருக்கும். அதனால் இஸ்லாத்தில் நினைவு நாளோ, பிறந்த நாளோ கிடையாது.
ஆண்டு தோறும் துக்கம் அனுஷ்டித்தல்
இஸ்லாமிய மார்க்கம் உளவியல் ரீதியாக மக்களின் மனதைப் பக்குவப்படுத்தும் மார்க்கமாகும். அதனால் இரவுத் தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற வணக்கங்களுக்கு ஓர் உச்சவரம்பை நிர்ணயித்தது போல் ஒரு குடும்பத்தில் ஓர் உறவினர் இறந்து விட்டால் அதற்காக சோகம் அனுஷ்டிக்கும் நாட்களுக்கும் ஓர் உச்சவரம்பை விதித்துள்ளது.
இல்லையேல் அந்தச் சோகம் மனிதனின் உள்ளத்தில் ஆதிக்கம் செலுத்தி மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தி விடும். அதனால் அவன் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவான். இதையெல்லாம் உடைத்தெறியும் விதமாக நபி (ஸல்) அவர்கள் இதற்கு ஓர் உச்சவரம்பை நிர்ணயிக்கின்றார்கள்.
இறந்து போனவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்த நாங்கள் தடுக்கப் பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின் அவனது மனைவி, நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். (அதாவது) இந்த நாட்களில் நாங்கள் சுர்மா இடவோ, நறுமணப் பொருட் களைப் பூசவோ, சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கு வதற்காகக் குளிக்கும் போது மணப் பொருட்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வதை விட்டும் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம்.அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)நூல்: புகாரி 313
ஹுசைன் (ரலி) கொல்லப்பட்ட பின் மூன்று நாட்களுடன் அந்தச் சோகம் முடிந்து விடுகின்றது. இதை அவர்களது குடும்பத்தார் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டு, இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்லி தங்களுடைய வாழ்நாளில் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டனர். ஹுசைன் (ரலி)யின் குடும்பத்தார் ஒவ்வோர் ஆண்டும் முஹர்ரம் பத்தாம் நாளை சோக தினமாக அனுஷ்டிக்கவில்லை.
ஆனால் ஷியாக்கள் இதற்கு ஒவ்வொரு ஆண்டும் புத்துயிர் கொடுத்து, இஸ்லாத்தின் உண்மையான சித்திரத்தைச் சிதைத்து வருகின்றனர்
ஷியாக்கள் மட்டுமல்லாமல் சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைக் கூறிக் கொள்வோரில் சிலரும் இந்தக் காரியங்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் செய்யும் கூத்துக்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
இவர்கள் செய்யும் அனாச்சாரங்கள், அட்டூழியங்கள், கேலிக் கூத்துக்கள் ஆகியவற்றை முதலில் வரிசையாகப் பார்த்து விட்டு, மார்க்க அடிப்படையில் அவற்றின் விளக்கத்தைப் பார்ப்போம்.
பஞ்சா எடுத்தல்
முஹர்ரம் மாதத்தின் முதல் பிறையிலிருந்து, பஞ்சா மையம் கொண்டிருக்கும் அலுவலம் களை கட்ட ஆரம்பித்து விடும். ஒரே ஊரில் தலைமை அலுவலகமும் இருக்கும், கிளை அலுவலகமும் இருக்கும். முஹர்ரம் 1ல் இதன் நடைவாசல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக பஞ்சா கொலு வீற்றிருக்கும். பஞ்சா அலுவலகத்தில் பிரமாண்ட பந்தல். அதில் எப்போதும் மக்கள் வெள்ளம் தான்.
பலூன் வியாபாரிகள், மிட்டாய் வண்டிகள், பொம்மை வியாபாரிகள், ஐஸ் வண்டிகள் என இந்தப் பகுதி நிரம்பி வழியும். இந்தக் காட்சிகள் அனைத்தும் வேளாங்கண்ணி, திருப்பதி கோயில்களைத் தோற்கடித்து விடும்.
தெருமுனையில் திருக்கோயில்
பொதுவாக தெரு முனைகளில் உள்ள நுழைவு வாயிலில் அரசாங்கமோ, அல்லது தனி நபர்களோ கட்டடம் எதுவும் கட்ட முடியாது. அப்படி யாராவது கட்டினால் அந்தத் தெருவே பொங்கி எழுந்து, அதனைப் பொசுக்கி விடுவர்.
ஆனால் சந்திப் பிள்ளையார் சன்னதி போல் இந்தப் பஞ்சா அலுவலகத்தை மட்டும் பக்கீர்கள் பரிபாலணக் கமிட்டி, தெருவின் மத்தியில் கட்டி பராமரிக்கும் போது அதை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொள்வர். அது தெய்வீக அருளை அன்றாடம் அள்ளித் தரும் ஆனந்த பவன் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். அதனால் தான் முச்சந்தியில் நிற்கும் இந்த மணி மண்டபத்தை எதிர்த்து யாரும் ஒரு வார்த்தை கூட முணுமுணுப்பதில்லை.
பஞ்சாவின் உடல் கட்டமைப்பு
பஞ்சா என்றால் ஐந்து என்று பொருள். ஐந்து ஆறுகள் ஓடுவதால் ஒரு மாநிலத்திற்கு பஞ்சாப் என்று பெயர். கிராமத்தில் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு அமைக்கப்படும் ஐந்து பேர் கொண்ட கமிட்டி பஞ்சாயத் என்று அழைக்கப்டுகின்றது.
அது போன்று தான் முஹர்ரம் பத்தாம் நாள் ஹுசைன் (ரலி) நினைவாக எடுக்கப்படும் பஞ்சாவில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்பட்டிருக்கும். இந்த ஐந்து விரல்களும் சிம்பாலிக்காக முஹம்மத் (ஸல்), அலீ, பாத்திமா, ஹஸன், ஹுசைன் (ரலி) ஆகியோரைக் குறிக்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்த ஐந்து பேர்களும் கடவுளாக உருவகப்படுத்தப் பட்டுள்ளனர்.
அதனால் தான் ஒரு கவிஞன், "எனக்கு ஐந்து பேர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் என்னை நரகிலிருந்து காப்பார்கள். அவர்கள் தாம் முஸ்தபா, முர்தளா (அலீ), பாத்திமா, அவர்களின் பிள்ளைகள் ஹசன், ஹுசைன்'' என்று பாடியுள்ளான்.
பஞ்சா என்று சொல்லப்படும் ஐந்து விரல்கள் கொண்ட வெள்ளி கைச் சின்னம் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சட்டத்தினுள் ஜரிகைத் தாளைப் பின்னணியாகக் கொண்டு குடி கொண்டிருக்கும். இதைச் சுற்றிலும் மல்லிகைப் பூக்கள் வளைத்து நிற்கும். இது தான் பஞ்சா என்ற ஏவுகணையின் உடல் கட்டமைப்பாகும். அப்படியே இந்துக்கள் எடுக்கும் சப்பரத்திற்கு ஒப்பாக இந்தப் பஞ்சா அமைந்திருக்கும்.
ஏழாம் பஞ்சா
பஞ்சா என்ற சப்பரம் பத்தாம் நாள் தான் தன்னுடைய தளத்திலிருந்து கிளம்பும். அதற்கு முன்னால் பக்த கோடிகள் இதனை விட்டு எங்கும் வெளியூர் போய் விடக் கூடாது என்பதால் ஏழாம் பஞ்சா என்று ஒன்று கிளம்புகின்றது. இந்த ஏழாம் பஞ்சாவில் ஹஸன், ஹுசைன் நினைவாக இரண்டு குதிரைகள் தயாராக நிற்கும். அதில் இரண்டு இளைஞர்கள் ஏறி அமர்வார்கள். இவர்கள் மீது அவ்லியாக்களுக்கு மிகவும் பிடித்த நிறமான(?) பச்சை நிறத் துணி போர்த்தப்பட்டிருக்கும்.
இந்த வீரர்களைத் தாங்கி வரும் குதிரைகளுக்கு பக்தர்கள், பக்தைகளின் கூட்டம் வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கும். குடம் குடமாக வந்து தண்ணீரைக் கொண்டு வந்து குமரி மற்றும் குடும்பத்துப் பெண்கள் குதிரையின் கால்களில் கொட்டுவார்கள். இவ்வாறு கொட்டினால் அவர்களின் தேவைகள் நிறைவேறும் என்ற குருட்டு நம்பிக்கையில்!
இரு குதிரைகளிலும் சவாரி செய்யும் இந்த வீரர்கள் யார் தெரியுமா? தங்களுக்கு ஆண் குழந்தைகள் பிறந்தால், அல்லது தன் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் நோய் தீர்ந்து விட்டால் அவனை முஹர்ரம் ஏழாம் நாளில் ஹஸனாகவும், ஹுசைனாகவும் கொண்டு வந்து குதிரையில் ஏற்றுவேன் என்று பெற்றோர்களால் நேர்ச்சை செய்யப்பட்டவர்கள்.
கர்பலாவின் லைவ் காட்சி
பச்சைப் போர்வை போர்த்தப்பட்டு பவனி வரும் இவர்களின் பாதடிகளில் தண்ணீராலும் பன்னீராலும் மக்கள் கழுவிக் கொண்டிருப்பார்கள். இதனால் பற்பல பாக்கியங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்!
குதிரையில் தங்கள் குழந்தைகளை ஏற்றுவதற்கும் போட்டா போட்டி நடக்கும். இதற்கென காசை வாரி இறைப்பர். அதிகமான பணம் கொடுத்து முன் பதிவு செய்பவர்களுக்கு எந்த ஆண்டு குதிரை சவாரி செய்ய வேண்டும் என்பதற்கான நாளை பக்கீர்கள் குறித்துக் கொடுப்பர்.
இவ்வாறு விசா கிடைத்து, குதிரையில் ஏறக் கொடுத்து வைத்த இவர்கள் முஹர்ரம் 10 நாளும் நோன்பு நோற்க வேண்டும். ஆஷூரா 9, 10 நோன்புகளைக் கூட ஹஸன், ஹுசைன் நினைவாகத் தான் பிடிப்பதாக இந்த மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்தக் குதிரை வீரர்கள் போருக்குப் புறப்படுகின்றார்களா? என்று பார்த்தால் அவ்வாறு செய்வதில்லை. குதிரையில் ஆற்றுக்குச் சென்று குளிக்கின்றனர். இவ்வாறு செய்தால் ஷஹாதத் எனும் அந்தஸ்து (?) கிடைத்து விடுகின்றது.
பக்தர்களின் வீட்டு வாசல்களுக்கு இந்தக் குதிரை வரும் போது, மக்கள் தாங்கள் நேர்ச்சை செய்திருந்த ஆடு, கோழிகளை இந்தக் கஞ்சா பக்கீர்களிடம் சமர்ப்பிப்பார்கள்.
பச்சைத் துணியால் மூடப்பட்ட இந்த இளைஞர்கள் அணிந்திருக்கும் கருப்புக் கண்ணாடியில் கர்பலாவின் காட்சி நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அது எப்படி? என்று யாராவது அந்த இளைஞரிடம் பேட்டி கேட்கும் போது, அவர் தான் கருப்புக் கண்ணாடியில் பார்த்ததைச் சொன்னால் தலை வெடித்து விடுமாம். பக்கீர்களின் பகுத்தறிவு சாம்ராஜ்யம் எப்படி கொடி கட்டிப் பறக்கின்றது என்று பாருங்கள்.
ஒரேயடியாக பத்தாம் நாள் மட்டும் பஞ்சா என்றால் அது பக்தர்களைத் தக்க வைத்துக் கொள்ள உதவாது என்பதால் எட்டாம் பஞ்சா, ஒன்பதாம் பஞ்சா என்று வகை வகையாக பஞ்சா எடுத்து பக்தர்களை மூளைச் சலவை செய்கின்றார்கள்.
மீன் சாப்பிடத் தடை
இந்த முஹர்ரம் பத்து நாட்களும் மீன் சாப்பிடக் கூடாது என்று ஒரு விதியை இவர்களாக தங்கள் இஷ்டத்திற்கு ஏற்படுத்தி வைத்துள் ளார்கள். இதன் விளைவாக பஞ்சா எடுக்கப்படும் ஊர்களில் இந்தப் பத்து நாட்களும் மீன் மிகவும் மலிவு விலையில் விற்கப்படும்.
தாம்பத்தியத்திற்குத் தடை
அது போல் முஹர்ரம் 10 நாட்களும் கணவன், மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று தடையையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இந்தத் தடை இதற்கு மட்டுமல்ல! முக்கியமான மூன்று மவ்லிதுகளான சுப்ஹான மவ்லிது, முஹய்யித்தீன் மவ்லிது, ஷாகுல் ஹமீது மவ்லிது போன்ற மவ்லிதுகள் ஓதும் நாட்களிலும் இந்தத் தடை அமுலில் இருக்கும்.
இந்தத் தடைகளை மீறி யாரேனும் மீன் சாப்பிட்டு விட்டால் அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விட்டால் அதற்குப் பரிகாரமாக பஞ்சா எடுக்கும் பக்கீர்களுக்கு ஆடு, கோழி போன்றவற்றை காணிக்கை செலுத்த வேண்டும். எவ்வளவு திமிர் இருந்தால் இந்தத் தடைச் சட்டத்தை முஸ்லிம்கள் மீது திணித்திருப்பார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
பத்தாம் பஞ்சா
முஹர்ரம் பத்தாம் நாளை அரசாங்கம் முஹர்ரம் பண்டிகை என்று அறிவித்து அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மூஸா (அலை) அவர்களுக்குக் கிடைத்த அந்த வெற்றி நாள் மறக்கடிக்கப்பட்டு, தொலைக் காட்சிகளில் மாரடிக்கும் காட்சிகள் வெளியாகி இஸ்லாத்தின் தூய தோற்றத்தைச் சிதைத்து நாறடித்துக் கொண்டிருக்கின்றது.
பத்தாம் நாள் கிளைமாக்ஸ்!
நாஸாவிலிருந்து ஏவுகணை கிளம்புவது போன்று பத்தாம் நாள் தான் பஞ்சா என்ற பைத்தியக் காரத்தனத்தின் சின்னம் கிளம்பும் "கவுண்ட் டவுன்' நாள்! மாலையானதும் அதன் மையத்திலிருந்து பக்கீர்கள் தோள் பட்டையில், அல்லது வண்டியில் ஏறியதும் அதன் ஊர்வலம் துவங்கி விடும்.
பேண்டுக்கு மேல் ஜட்டி
பஞ்சாவுக்கு முன்னால் சிலம்பாட்டப் படைகள் சிலம்பாட்டம் ஆடும். இவர்கள் வித்தியாசமாக பேண்டுக்கு மேல் ஜட்டி அணிந்து கொண்டு, பெண்கள் அணியும் நகைகளை அணிந்து கொண்டு சிலம்பாட்டம் ஆடுவார்கள். இந்த சிலம்புச் செல்வர்கள் பஞ்சாவின் முன்னால் வருவதற்கு முன், மேள தாளத்துடன் தெருத் தெருவாக சென்று தங்கள் வீரத்தை அரங்கேற்றுவர். அதன் பின் பஞ்சாவுக்கு முன்னர் வந்து ஆட்டம் போடுவர். தீப்பந்தம் சுழற்றுதல், பட்டை சுழற்றுதல், வாயில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு எரியும் தீக்குச்சியில் ஊதி தீப்பந்து உருவாக்குதல் போன்ற சாகசங்களைச் செய்து மக்களை பரவசத்தில் ஆழ்த்துவார்கள்.
புலி வேஷம் போடுதல்
இந்தப் பஞ்சாவில் நேர்ச்சை செய்த சிலர் உடல் முழுவதும் சந்தனம் பூசிக் கொண்டு, கோயிலில் சாமி வந்தவர்கள் போல் சுற்றிக் கொண்டிருப்பர். சிலர் புலி வேஷம் போட்டு வந்து மக்களைப் புல்லரிக்கச் செய்வர்.
ஹுசைன் (ரலி) யின் போர்க்கள நினைவாக தங்களுடன் வாள்கள், ஈட்டிகள் போன்றவற்றை எடுத்துச் செல்கின்றனர்.
பக்கீர்கள் ஒரு விதப் பொடியைத் தூவி பக்தர்களை மகிழ்ச்சியூட்டுவர்.
உப்பு மிளகு போடுதல்
புரதச் சத்து குறைவாக இருந்தால் உடலில் உண்ணிகள் தோன்றி துருத்திக் கொண்டிருக்கும். இதற்கு வைத்தியம் எல்லாம் பார்க்கத் தேவையில்லை. இந்த உண்ணி போக வேண்டும் என்று நேர்ந்து கொண்டு, பஞ்சா அலுவலகத்தில் கொண்டு போய், உப்பையும் மிளகையும் படைத்து விட்டு வந்தால் போதும். மின்னிக் கொண்டிருக்கும் உடல் உண்ணிகள் பறந்து போய் விடும். அப்படி ஒரு நம்பிக்கை!
குழந்தைகள் வேண்டி கொழுக்கட்டை லிங்கம்
ஆண் குழந்தை வேண்டுமா? ஆணுறுப்பு வடிவத்தில் கொழுக்கட்டை செய்து பத்தாம் நாளன்று இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் மக்களிடம் விநியோகித்தால் போதும். ஆண் குழந்தை பிறந்து விடும். (பெண் குழந்தைகளை யாரும் வேண்டுவ தில்லை) யார் இந்த மாவு லிங்கத்தைப் பெறுகின்றாரோ அவர் பாக்கியம் பெற்றவராவார். இது தவிர ஹஸன், ஹுசைனின் வாள், வேல் போன்ற வடிவத்திலும் கொழுக்கட்டைகள் செய்து வீசப்படும்.
தீமிதியும், தீக்குளிப்பும்
தனக்கு நல்ல கணவன் அமைந்தால் முஹர்ரம் பத்தாம் நாள் வந்து தீக்குளிப்பதாக பருவ வயதுப் பெண் நேர்ச்சை செய்வாள். நல்ல மாப்பிள்ளை வாய்த்த பின்னர் அந்தப் பெண்ணும், அவளது தாயாரும் பஞ்சாவுக்கு வந்து தங்களது தலைகளில் நெருப்பை அள்ளிக் கொட்டி நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.
கோயில் திருவிழாக்களில் தீமிதி நடப்பது போன்று தங்கள் பாவங்கள் தீர, நாட்டம் நிறைவேற தீமிதியும் நடத்துகின்றனர்.
ஹஸன் (ரலி) அருந்திய நஞ்சு பானம்
ஹஸன் (ரலி) அவர்கள் நஞ்சுண்டதன் நினைவாக மக்களும் புளி கலந்த ஒரு பானகரம் என்ற பெயரில் அருந்திக் கொள்கின்றனர். உண்மையில் இவர்களின் நம்பிக்கைப் படி ஹஸன் (ரலி) மீது அவர்களுக்குப் பற்று இருக்குமானால் இவர்கள் நஞ்சை அருந்த வேண்டும். அவ்வாறு நஞ்சை அருந்தினால் இது போன்ற பஞ்சாக்கள் எல்லாம் பஞ்சாகப் பறந்து போகும்.
காதலர் தினம்
இந்தப் பஞ்சாவில் நடைபெறும் ஆனந்தக் கூத்துக்களைக் கண்டு களிக்க காளையரும், கன்னியரும் ஜனத் திரளில் சங்கமித்துக் கொள்வார்கள். ஹுசைன் (ரலி) உயிர் நீத்த அந்த நாளைக் காளையர்கள், கன்னியர்களைப் பார்த்துப் பார்த்து ஹுசைன் (ரலி) யை நினைத்து உருகுவார்கள். பதிலுக்குக் கன்னியரும் திரும்பப் பார்த்து ஹுசைன் (ரலி)யை நினைவு கூர்வார்கள். இவ்வாறாக வீரர் ஹுசைன் (ரலி)யின் நினைவாக இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் சமுதாய வீர உணர்வுகளை ஈரப்படுத்திக் கொள்கின்றனர்.
மாரடித்தல்
ஒரு கூட்டம் இப்படி கொட்டு மேள, தாளத்துடன் ஹுசைன் (ரலி)யின் நினைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு கூட்டம் தங்கள் மார்களில் அடித்துக் கொண்டு ஹுசைன் (ரலி)யை நினைவு கூர்ந்து கொள்கின்றனர். அவர்கள் மாரடித்து அழுது புலம்பி கர்பலா நாளுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
வெள்ளத்தில் மிதந்து வரும் விநாயகர் போல்..
விநாயகர் சதுர்த்தியன்று சிலையைத் தூக்கி வருவது போன்று பக்கீர்கள் தங்கள் தோள் புஜங்களில் இந்தப் பஞ்சாவைத் தூக்கி வருவர். அது வீதியில் உலா வரும் போது அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்கும். மாலை மறைந்து இரவு வேளை ஆரம்பிக்கும்.
வெள்ளிக் கைச் சின்னத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் மஞ்சள் ஜரிகையில் பெட்ரோமாக்ஸ் விளக்கின் மஞ்சள் ஒளி பட்டவுடன் அது ஒரு தங்க ஆறு ஓடுவது போன்று காட்சியளிக்கும்.
இத்தகைய ஒளி வெள்ளத்திலும் அதனைச் சுற்றி மேக மூட்டத்தைப் போன்று மண்டிக் கிளம்பி மணம் பரப்பும் சாம்பிராணி புகை ஓட்டத்திலும் பக்தர்கள் தங்கள் மனதைப் பறி கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.
பச்சைத் தலைப்பாகையுடன் பக்கீர்கள் மயில் இறகைக் கொண்டு ஆண், பெண் பேதமில்லாமல் தடவி வருடி விடுவார்கள். இதில் பக்தர்களின் மலைகள் போன்ற பாவங்கள் மழையாகக் கரைந்து போய் விடுமாம். தாய்மார்கள் மனமுருக நின்று அதைப் பார்த்து பிரார்த்தனை புரிந்து கொண்டிருப்பார்கள்.
இவ்வாறாக இறுதியில் அதை ஆற்றில் கொண்டு போய் கரைத்து விட்டு வருவார்கள். அவ்வாறு கரைத்து விட்டு வரும் போது அந்தப் பஞ்சாவை வெள்ளைத் துணியால் மூடி விட்டு, ஒப்பாரி வைத்து ஓலமிட்டவாறே கலைந்த அந்தப் பஞ்சாவுடன் வீடு திரும்புவார்கள்.
இதன் பிறகு அது வரை தடுக்கப்பட்ட காரியங்கள் அனைத்தும் இவர்களுக்கு ஹலாலாகி விடுகின்றன.
இது வரை நாம் கண்டது பஞ்சா பற்றி ஒரு நேர்முகத் தொகுப்பு என்று கூட கூறலாம். இதில் நீங்கள் கண்ட காட்சிகளைக் கீழ்க்கண்ட பாவங்களாகப் பிரித்துக் கூறலாம்.
1. அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்
2. அல்லாஹ்வின் அதிகாரத்தைக் கையில் எடுத்தல்
3. மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுதல்
4. புதுப்புது வணக்கங்களை மார்க்கத்தில் புகுத்தும் பித்அத்
நபி (ஸல்), அலீ, பாத்திமா, ஹஸன், ஹுசைன் (ரலி) ஆகியோரின் நினைவாக ஐந்து விரல்களை உருவாக்கி அவற்றுக்கு தெய்வீக அந்தஸ்து வழங்குவது, இறந்த பிறகும் அவர்களுக்கு ஆற்றல் இருக்கின்றது என்று நம்புவது கடைந்தெடுத்த ஷிர்க் ஆகும்.
குதிரையின் குளம்புகளிலும், குதிரையின் மீதிருக்கும் இளைஞனின் கால்களிலும் அருள் கொப்பளிக்கின்றது என்று நினைத்து அவர்களின் கால்களில் தண்ணீரைக் கொட்டுவதும் கொடிய இணை வைத்தலாகும். இறந்து விட்ட அந்த ஐவரிடமிருந்தும் இவருக்கு ஆற்றல் கிடைக்கின்றது என்று நம்புவது தான் இந்தச் செயல்களுக்கு அடிப்படை!
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!
"அவர்களுக்கு நடக்கிற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கிற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கிற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கிற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கு எதிராக சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக!அல்குர்ஆன் 7:194,195
அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.அல்குர்ஆன் 16:21
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்பட இறந்து விட்ட யாராக இருந்தாலும் அவர்கள் பார்க்கவோ, செவியுறவோ மாட்டார்கள் என்பதை இந்த வசனங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன.
குழந்தை பாக்கியம்
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண் களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றல் உடையவன்.அல்குர்ஆன் 42:49,50
குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது என்பதை இந்த வசனங்கள் உணர்த்துகின்றன. அதை அடியார்களிடம் கேட்பது பைத்தியக் காரத்தனமும் பகிரங்க இணை வைப்பும் ஆகும். படைத்தல் என்ற இந்தப் பேராற்றல் வல்ல நாயனின் ஆட்சிக்குரிய தனி வலிமை! அந்த வலிமையை உணர்த்தி வார்க்கப்பட்ட சமுதாயதம் தான் இஸ்லாமியச் சமுதாயம்! அப்படிப்பட்ட இஸ்லாமிய சமுதாயம் குதிரையின் குளம்படியில் வந்து கும்பிட்டுக் குப்புற வீழ்ந்து கிடப்பது வேதனையிலும் வேதனை.
குழந்தை பாக்கியத்தை நாடி லிங்கத்தின் வடிவில் கொழுக்கட்டை செய்து கூட்டத்தில் விநியோகிப்பது இணை வைத்தல் மட்டுமில்லாமல் கேலிக் கூத்துமாகும்.
நேர்ச்சை ஒரு வணக்கமே!
அனு தினமும் தொழுகையின் போது, அல்ஃபாத்திஹா அத்தியாத்தில், உன்னையே நாங்கள் வணங்கு கின்றோம். உன்னிடமே உதவி தேடுகின்றோம் என்று தொழுபவர்கள் அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்கின்றார்கள். இதில் இடம்பெறும் வணக்கம் என்ற வார்த்தையில் நேர்ச்சை செய்தலும் அடங்கும்.
பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்!அல்குர்ஆன் 22:29
இந்த வசனத்தின் படி நேர்ச்சையை அல்லாஹ்வுக்கு மட்டும் நிறைவேற்ற வேண்டும் என்றிருக்க இறந்து விட்ட அடியார்களுக்காக நேர்ச்சை செய்யும் அநியாயமும் அலங்கோலமும் இங்கே நடந்தேறுகின்றது.
அதுவும் தீக்கங்குகளைத் தலையில் போட்டுக் கொண்டு இந்தத் தீ(ய) நேர்ச்சையெல்லாம் உடலுக்கு ஊறு விளைவிக்கின்ற, உயிருக்கு உலை வைக்கின்ற நேர்ச்சைகள். இவை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவையாகும்.
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.அல்குர்ஆன் 2:195
ஒருவன் தன் கையாலேயே தனக்கு நாசத்தை ஏற்படுத்திக் கொள்ள அல்லாஹ் தடை விதிக்கின்றான்.
ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்களிடையே தொங்கிய படி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்தார். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "இவருக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். "(கஅபாவுக்கு) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கின்றார்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "இவர் இவ்விதம் வேதனைப் படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது'' என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி)நூல்: புகாரி 1865
அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் கூட, இது போன்று தம்மை வருத்திக் கொள்ளும் நேர்ச்சைகளைச் செய்யக் கூடாது எனும் போது அதை மற்றவர்களுக்காகச் செய்வது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளங்கலாம். அப்படியே பாவமான காரியத்தில் நேர்ச்சை செய்தாலும் அதை நிறைவேற்றக் கூடாது என்ற சட்டமும் இந்த மக்களுக்குத் தெரியவில்லை.
அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் (அதை நிறைவேற்றி) அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: புகாரி 6696
இது வரை பஞ்சாவின் மூலம் இறைவனுக்கு இணை வைக்கும் மாபாதகம் நடப்பதைப் பற்றி பார்த்தோம்.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ் வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.அல்குர்ஆன் 4:48
தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.அல்குர்ஆன் 4:116
இந்த வசனங்களின் அடிப் படையில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது அவனால் மன்னிக்கப்படாத பாவமாகும். சுவனத்திற்குச் செல்வதைத் தடுத்து நரகத்தில் நுழைத்து விடும் பாவமாகும்.
அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுதல்
பஞ்சாவில் ஏற்படும் அடுத்த பாவம் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாகும்.
மார்க்கத்தில் சட்டம் இயற்றல் என்பது அவனுடைய தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளதாகும். அதை ஷியாக்களின் வாரிசுகளான இந்தப் பக்கீர் சாஹிபுகள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்கின்றனர்.
நாம் தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற அனுமதிக்கப்பட்ட காரியங்களை அல்லாஹ் தடுத்து விடுகின்றான். தொழுகையில் முதல் தக்பீரின் போது இந்தத் தடை அமுலுக்கு வந்து விடுவதால் இது தக்பீர் தஹ்ரீமா எனப்படுகின்றது.
அது போல் ஹஜ்ஜுக்குச் செல்லும் போது இஹ்ராமை மனதில் எண்ணி அதற்குரிய ஆடை அணிந்து விட்டால் அது வரை நமக்கு ஹலாலாக இருந்த தாம்பத்தியம், வேட்டையாடுதல், திருமணம் போன்ற காரியங்கள் ஹராமாகி விடுகின்றன. இது போன்று சில குறிப்பிட்ட வணக்ககங்களில் அல்லாஹ் நமக்குச் சில தடைகளை விதித்துள்ளான். இந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமான தனி அதிகாரமாகும்.
ஹஜ்ஜின் போது இந்தத் தடையை மீறி விட்டால் நாம் ஓர் ஆடு அறுத்துப் பலி கொடுத்து பரிகாரம் தேட வேண்டும். இதுவும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது தான். இப்படி குறிப்பிட்ட வணக்கங்களின் போதும், பொதுவாகவும் ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே சொந்தமானது.
பாருங்கள்! இந்த அதிகாரத்தை, பஞ்சா எடுக்கும் பக்கீர் பண்டாரங்கள் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு முஹர்ரம் பத்து நாட்களிலும் மீன் சாப்பிடக் கூடாது என்று தடை! தாம்பத்தியத்திற்குத் தடை! இந்தத் தடைகளை மீறி விட்டால் அதற்கு ஆடு, கோழி போன்றவற்றைப் பலி கொடுத்து பரிகாரம் தேட வேண்டும் என்று வைத்துள்ளார்கள்.
இவர்களுக்கு எவ்வளவு துணிச்சலும் நெஞ்சழுத்தமும் இருந்தால், திமிர் இருந்தால் அல்லாஹ்வின் இந்த அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுப்பார்கள்?
அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.அல்குர்ஆன் 42:21
இவர்களோ அல்லாஹ்வின் இந்தக் கேள்விக்கு, நாங்கள் இருக்கின்றோம் என்று பதில் கூறுவது போல் செயல்படுகின்றார்கள்.
நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்?அல்குர்ஆன் 66:1
என்று நபி (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ் கேட்கின்றான். ஆனால் இவர்களோ அல்லாஹ் அனுமதியளித்ததை தங்கள் இஷ்டத்திற்கு ஹராமாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இது அனுமதிக்கப்பட்டது; இது விலக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்.அல்குர்ஆன் 16:116
நிச்சயமாக இதையெல்லாம் மார்க்கம் என்ற பெயரில் இட்டுக் கட்டியதால் அல்லாஹ்வின் மீதே பொய்யை இட்டுக் கட்டிய மாபெரும் துரோகத்தைச் செய்தவர்களாகின்றனர். அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதை அல்லாஹ் மிக வன்மையாகக் கண்டிக்கின்றான்.
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.அல்குர்ஆன் 6:21
அறிவின்றி மக்களை வழி கெடுப்பதற்காக அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக் கட்டுவோரை விட மிகப் பெரிய அநீதி இழைத்தோர் யார்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.அல்குர்ஆன் 6:144
மாற்று மதக் கலாச்சாரம்
பஞ்சா எனும் சப்பரத்தை உருவாக்குதல், லிங்க வடிவில் கொழுக்கட்டை செய்தல், மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டித்தல், நினைவு நாள் கொண்டாடுதல் போன்றவை மாற்றுமதக் கலாச்சாரங்களில் உள்ளவையாகும்.
ஆண் குழந்தை வேண்டுமென்று ஆணுறுப்பு வடிவத்தில் கொழுக்கட்டை செய்து விளம்புவது ஆபாசம் இல்லையா? என்று கேட்டால், இது எங்கள் பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது என்று கூறுகின்றார்கள். இதை அப்படியே அல்லாஹ் தனது திருமறையில் படம் பிடித்துக் காட்டுகின்றான்.
அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது "எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளை யிட்டான்'' என்று கூறுகின்றனர். "அல்லாஹ் வெட்கக் கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக!அல்குர்ஆன் 7: 27
லிங்கத்தை உருவாக்கி அதற்கு வழிபாடு நடத்துவது, அதைப் புனிதமாகக் கருதுவதெல்லாம் அவர்களது கலாச்சாரமாகும். இந்தக் கலாச்சாரத்தை அப்படியே இவர்கள் இந்தப் பஞ்சாவில் செயல்படுத்தித் தங்களின் வந்தவழி பாரம்பரியத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்குச் சரியான பாடத்தைப் புகட்டி, மாற்றுக் கலாச்சாரத்தை நம்மவர்கள் காப்பியடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது.
நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். "தாத்து அன்வாத்' என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரே.. அவர்களுக்கு "தாத்து அன்வாத்து' என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள் என்று கூறினோம்.அதற்கு நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்.! .இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும் என்று சொல்லி, என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா(அலை) அவர்களிடத்தில், மூஸாவே அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாக பின்பற்றுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்:அபூவாக்கிதுல்லைசி (ரலீ)நூல்: திர்மிதி 2106, அஹ்மத் 20892
இத்தகைய மாற்றுக் கலாச்சாரத்தில் உள்ளது தான் புலி வேஷம் போடுதல். அல்லாஹ் மனிதனை அழகிய தோற்றத்தில் படைத்துள்ளான்.
மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.அல்குர்ஆன் 95:4
ஆனால் இந்த அற்புதப் படைப்போ புலி வேஷம் போட்டுக் கொண்டு மிருக நிலைக்கு மாறி விடுகின்றான்.
அல்லாஹ் படைத்த தோற்றத்தை மாற்றுவது ஷைத்தானின் செயல் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
"அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப் பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்று வார்கள்'' (எனவும் ஷைத்தான் கூறினான்) அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.அல்குர்ஆன் 4:119
புதுப் புது வணக்கங்கள்
பஞ்சாவும் அதையொட்டிய அனைத்துக் காரியங்களும் வணக்கம் என்ற பெயரால் மக்களிடம் திணிக்கப் பட்டு விட்ட புதுக் காரியங்களாகும். இவை நிச்சயமாக வழிகேடுகள். இந்த வழிகேடுகள் நரகத்தில் கொண்டு போய் சேர்த்து விடும். நரகத்திற்குக் கொண்டு செல்லும் இந்தக் காரியங்களைத் தான் இவர்கள் அரங்கேற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.
நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)நூல்: நஸயீ 1560
இதில் வேடிக்கை என்னவென்றால் ஹஸன், ஹுசைன் பெயரில் இந்தப் பத்து நாட்களும் ஓதும் மவ்லிதில், ஒளி வீசும் ஹுசைனின் கைகளை வரைந்தவர்களின் கைகள் நாசமாகட்டும் என்ற கவிதை வரிகளையும் ஒரு பக்கம் ஓதிக் கொள்வது தான். இந்த ஹஸன், ஹுசைன் மவ்லிதும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கருத்துக்களைத் தாங்கியதாகும். இதுவும் ஒரு பித்அத் ஆகும்.
பக்கீர்கள் ஒரு பார்வை!
ஃபக்கீர் என்றால் ஏழை! செல்வந்தர்களைத் தவிர மற்றவர்கள் ஏழை தான். ஆனால் இவர்களோ யாசகத்தைத் தங்கள் குலத் தொழிலாக்கிக் கொண்டு, தங்களைத் தனி ஜாதியாகக் காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இஸ்லாத்தில் யாசகம் என்பது தடுக்கப்பட்டது மட்டுமன்றி, சபிக்கப்பட்டதும் கூட! இதை இவர்கள் குலத் தொழிலாகக் காட்டுவதுடன் நின்றால் பரவாயில்லை. இவர்கள் யாசகத்திற்கு வரும் போது, கையில் ஒரு கொட்டு! கழுத்தில் உத்திராச்சக் கொட்டை! தலையில் பச்சைத் தலைப்பாகை! காதில் சுருமா கம்பி! குறிப்பாக முஹர்ரம் பத்து நாட்களில் கையில் மயில் தோகை!
இப்படி ஒரு கோலத்தில் வந்து தங்களை ஒரு தெய்வீகப் பிறவியாகக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இவர்களிடம் யாசகம் கொடுப்பது மட்டுமின்றி ஈமானையும் சேர்த்தே பறி கொடுத்து விடுகின்றார்கள். இதல்லாமல் கப்ருகள் தோண்டுவதையும் இந்தப் பக்கீர்கள் தங்கள் குலத் தொழிலாகப் பாவித்து வருகின்றார்கள்.
இவர்கள் தான் பஞ்சா எடுத்துக் கொண்டு தலைமுறை தலைமுறையாக மக்களை நரகத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அன்றாட வாழ்க்கையில் மது, கஞ்சா அருந்துவது இவர்களுக்கு சகஜமான ஒன்று!
ஆலிம்களின் பங்கு
ஆலிம்கள் எனப்படுவோர் இந்தப் பஞ்சா எனும் வழிகேட்டைப் பற்றி ஜும்ஆ மேடைகளில் மக்களுக்கு எடுத்துச் சொல்லி மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதற்கு இவர்கள் தயாரில்லை. அது போன்ற கருத்துக்களை இவர்கள் முன் வைப்பதுமில்லை.
முஹர்ரம் மாதத்தில் ஜும்ஆ மேடைகளில் பஞ்சா எனும் வழிகேட்டைக் கண்டித்துப் பேசாமல், மூஸா (அலை) அவர்களின் உண்மை வரலாற்றைக் கூறாமல், கர்பலாவின் கதைகளை அள்ளித் தெளித்து விட்டுச் சென்று விடுகின்றனர். அது பஞ்சாவுக்கு உரமாகி விடுகின்றது.
தவ்ஹீதுவாதிகளை அழிப்பதற்கு எடுத்த முயற்சிகளில் கடுகளவு முயற்சியைக் கூட இந்தப் பஞ்சாவிற்கு எதிராக எடுக்கவில்லை. இவ்வாறு இவர்கள் முயற்சி எடுக்காமல் இருப்பதற்குக் காரணமும் இருக்கின்றது.
இந்தப் பஞ்சா என்பது ஷியாக்களின் நடைமுறை என்று சுன்னத் வல் ஜமாஅத்தினர் சொல்லிக் கொண்டாலும் இவர்களிடம் குடி கொண்டிருப்பதும் ஷியாக் கொள்கைதான். இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்ற நாசகார நம்பிக்கை இருந்தால் போதும். அங்கு ஷியாயிஸம் நிச்சயமாகக் குடி கொண்டிருக்கும். அந்தக் கொள்கையில் இந்தப் பக்கீர்களும், ஆலிம் படைகளும் ஒன்றுபட்டே இருக்கின்றார்கள். இந்த நிலையில் இருந்து கொண்டு இவர்களால் ஒரு போதும் பஞ்சாவை ஒழிக்க முடியாது. அதனால் தான் அது இவ்வளவு நாளும் ஒழியாமல், ஓயாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
நிச்சயமாக இந்தப் பஞ்சாக்கள் ஒழியப் போவது இப்ராஹீம் (அலை) அவர்கள் கொண்டு வந்த ஏகத்துவத்தின் மூலம் தான். இறையருளால் அது நிறைவேறும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
ஆக்கம் : ஏகத்துவம் பிப்ரவரி 2005